HomePoetryStoriesLyrics & SongsTamil PoemsContact us


ஆசை மச்சான்!
உசுப்புக் கோழி உசுப்பும் முன்னே, மச்சான் - நீ
    ஓடிப் போனே கலப்பை யோடே, மச்சான்
பசியைத் தீத்து வைக்கத் தானே, மச்சான் - நீ
    பச்சைத் தண்ணி குடிச்சுப் போனே, மச்சான்
சிறுத்தை போலே பாய்ஞ்சி ருந்தே, மச்சான் - நீ
    செருப்பு போலே தேய்ஞ்சு போனே, மச்சான்
பருத்திக் காட்டில் வெடிச்சுப் பூத்த பஞ்சாய் - நீ
    அடிச்ச காத்தில் ஆய்ஞ்சு போனே, மச்சான்
கலப்பை யைத்தான் வைச்சுப் போடு, மச்சான் - நான்
    கம்பங் கஞ்சி கூளு தாரேன், மச்சான்
அலுப்பு தீரக் களுத்தை நீட்டு, மச்சான் - நான்
    சுளுக் கெடுத்து சொகுசு தாரேன், மச்சான்
பரிசம் போடப் புருசன் வேணும், மச்சான் - நாமே
    சரசம் பேசித் தேதி யாச்சு, மச்சான்
வருசம் ரெண்டு ஓடிப் போச்சு, மச்சான் - உன்
    சாதி மல்லி வாடிப் போச்சு, மச்சான்
வயசுப் புள்ளே நொந்தி ருக்கு, மச்சான் - உசுரே
    உனக்கே தான் தந்தி ருக்கு, மச்சான்
மனசு எல்லாம் வெந்தி ருக்கு, மச்சான் - அளுவே
    மணிக் கணக்கா வந்தி ருக்கு, மச்சான்
சுருக்குப் பையில் சுருட்டும் பணம், மச்சான் - அந்த
    இறுக்கு மாட்டில் இருக்கும் சனம், மச்சான்
நெருப்பு வைச்சுக் கொளுத்தி னாலும், மச்சான்- நீ
    வெளிச்சம் ஏத்தும் மெளுகு வத்தி, மச்சான்
குடி இருக்கக் குடிசை போதும், மச்சான் - உன்
    மடி இருக்கும் மவுசு போதும், மச்சான்
செதி இடுக்கில் கூடு போதும், மச்சான் - நாமே
    சிரித் திருக்கும் தோது போதும், மச்சான்
படிக் கட்டு ஓட்டு வீடு வேணாம் - காசு
    இடுக் கட்டில் மாட்டிப் போக வேணாம்
குடி கெட்டுக் கூசிப் போக வேணாம் - யாரும்
    குறை பட்டு ஏசிப் போக வேணாம்
கறவு மாடு கன்னுக் குட்டி, மச்சான் - நாமே
    கணக்குப் பாத்தா அது தானே லட்சம்
வரவு தேடி அலைய வேணாம், மச்சான் - வரட்டு
    கவுரவம் தான் அது எந்தப் பட்சம்?
நடை நடக்க ஆத்து மணல் உண்டு - அல்லி
    மண மணக்கப் பூத்தி ருக்கு செண்டு
பட படக்க ரெக்கையைத் தான் கொண்டு - மேலே
    பறக்குது பார் வெள்ளைப் புறா ரெண்டு










 

             Copyright © www.ravianbil.com   l   Home   l   Email